சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் சிவப்பு கம்பள வரவேற்புடன் பேரவைக்குள் வந்த ஆளுநர் அர்லேகர், "வணக்கம்" என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.

தனது உரையில், தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் நலன் மற்றும் மத்திய அரசுடனான நிதி தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தற்போதைய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் நிதி நிலைமை சவாலான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதை சீரமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் புழக்கம் மாநிலத்தில் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். இதன் ஒரு பகுதியாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் ஒழிப்புக்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை, முந்தைய தொழில் கொள்கைகளின் சாதக அம்சங்களை தொடர்வதுடன், புதிய தொழில் முதலீட்டு கொள்கையை தவெக அரசு விரைவில் வெளியிட உள்ளதாக ஆளுநர் அறிவித்தார். மேலும், தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசுடன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்களையும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கான நிலுவை நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஓசூர், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மும்மொழிக் கொள்கை தொடர்பாக பேசிய ஆளுநர், அதனை அமல்படுத்தினால்தான் நிதி வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு உரிய நிதி எந்த நிபந்தனையும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் விவசாயிகள் நலன் ஆகியவை தற்போதைய அரசின் முக்கிய முன்னுரிமைகளாக இருப்பதாகவும், நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும் தனது உரையில் பதிவு செய்த ஆளுநர், தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் மாற்றத்தை தேர்வு செய்துள்ளதாகவும், குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சியை கைப்பற்றிய முதலமைச்சர் விஜய் புதிய அரசியல் அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.