சென்னை : கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வந்தது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி கிராமுக்கு ரூ. 50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்து ரூ. 13,300 மற்றும் ரூ. 1,06,400 என விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 12-ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இன்றி நிலையாக இருந்தது. பின்னர் ஜூலை 13-ஆம் தேதி கிராமுக்கு ரூ. 100-ம், சவரனுக்கு ரூ. 800-ம் குறைந்து பெரிய சரிவைச் சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக, ஜூலை 14-ஆம் தேதியும் கிராமுக்கு ரூ. 50-ம், சவரனுக்கு ரூ. 400-ம் குறைந்து தங்கம் விலை ரூ. 13,150 (கிராம்) மற்றும் ரூ. 1,05,200 (சவரன்) என விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 13,180-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 1,05,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 அதிகரித்து ரூ. 240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2,40,000-க்கும் விற்பனையாகிறது. தொடர்ச்சியாகக் குறைந்து வந்த விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள், நகைப்பிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.