சென்னை : தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 18ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 19ஆம் தேதியும் இதே மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிகளிலும் மாநிலத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, ஜூன் 21ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. இருப்பினும் வெப்பநிலை சற்று குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.