சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் "ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்" தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் "தர்மன்". இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு மருத்துவர் (Doctor) கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்க்கும்போது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து, இத்திரைப்படம் ஹாலிவுட்டின் உலகப் புகழ்பெற்ற மருத்துவத் தொடரான "தி குட் டாக்டர்" (The Good Doctor) கதையின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் என்ற புதிய வதந்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் 'The Good Doctor' தொடரின் ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ளதாகவும், அதன் தழுவலாகத்தான் 'தர்மன்' திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் பரவிய இந்தத் தகவல்களுக்குப் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தற்பொழுது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இத்தகைய செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் "Fake News!" என்று ஒற்றை வரியில் பதிவிட்டு வதந்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இயக்குநரின் இந்த உடனடி விளக்கத்தின் மூலம் 'தர்மன்' திரைப்படம் ஒரு தனித்துவமான நேரடிக் கதைக்களம் கொண்டது என்பது உறுதியாகியுள்ளது.