சென்னை : திரையுலகில் மூத்த நடிகராகவும், அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் மிகவும் வெளிப்படையாகவும் கருத்து தெரிவிப்பவர் நடிகர் ராதா ரவி. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்புவின் மகள் திருமணத்திற்குத் தான் அழைக்கப்படாதது குறித்தும், தேர்தல் காலத்தில் தான் அவர்களுக்குச் செய்த உதவிகள் மற்றும் தற்போதைய புறக்கணிப்பு குறித்தும் மிகவும் வருத்தத்துடன் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

குஷ்பு - சுந்தர்.சி தம்பதியினரின் மகள் திருமணம் மிகவும் பிரமாண்டமாக கோவாவில் நடைபெற்ற நிலையில், தான் அந்த விழாவிற்குச் செல்லவில்லை என்று ராதா ரவி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "குஷ்பு என்னை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை, அதனால்தான் நான் போகவில்லை. அழைத்திருந்தால் நிச்சயம் சென்றிருப்பேன்.

சுந்தர்.சி என்னை அழைப்பார் என்றுதான் நினைத்தேன், ஆனால் அவர் அழைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து அழைத்திருக்கலாம் அல்லது அவர்களது சமூக அந்தஸ்து (Level) பெரிதாகிவிட்டதா என்று தெரியவில்லை" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர்களுடனான பழைய நட்பையும், தேர்தல் காலத்தில் தான் செய்த உதவிகளையும் நினைவு கூர்ந்த ராதா ரவி, தற்போது அவர்கள் தன்னைத் தவிர்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "நடந்து முடிந்த தேர்தலில், சுந்தர்.சி மதுரையில் போட்டியிட்டபோது நான் தான் அவரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தேன். அப்போது அவர்களுக்கு எனது தேவை இருந்தது. ஆனால் இப்போது நான் அவர்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன். தேவைகள் முடிந்த பிறகு என்னை ஒதுக்கிவிட்டார்கள் போலிருக்கிறது" என்று மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார்.

திரையுலகில் பல ஆண்டுகளாகப் பழகிய நெருக்கமானவர்களே, தற்பொழுது தன்னை அழைக்காமல் புறக்கணிப்பது குறித்து ராதா ரவி வெளிப்படுத்தியுள்ள இந்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளன.