சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் அவரது 173-ஆவது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, 'ஓ மை கடவுளே' பட புகழ் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற தர்மன் திரைப்படத்தின் பூஜை விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது பேச்சுக்கள் குறித்து வெளியாகும் விமர்சனங்களுக்குத் தனது பாணிலேயே சுவாரஸ்யமாகப் பதிலளித்துப் பேசியுள்ளார்.
பூஜை விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தற்பொழுதெல்லாம் மேடைகளில் தன்னைப் பேசுவதற்கு அழைத்தாலே ஒருவித தயக்கம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பின்னணியில் உள்ள காரணத்தைப் பகிர்ந்த அவர், தான் எதைப் பேசினாலும் அது ஒரு பிரச்சினையாக மாறிவிடுகிறது என்றும், ஒன்று தனக்குப் பிரச்சினை அல்லது மற்றவர்களுக்குப் பிரச்சினையாக உருவெடுத்து விடுகிறது என்றும், எதைப் பேசினாலும் எவரேனும் ஒருவர் அதிலிருந்து எதையாவது கிளப்பிக்கொண்டே இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தான் மேடைகளில் பேசாமல் சும்மா இருந்தால், 'இவர் ஏன் பேசவே மாட்டேங்குறார், வாயில் என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கார்?' என்று கிண்டல் செய்து கலாட்டா பண்ணுவார்கள் என்றும், அதுவே மேடையில் ஏறிப் பேசினால் 'இப்போ எதுக்கு இவர் பேசணும், இவர் பேசியிருக்கக் கூடாது' என்று மத்தவங்க விமர்சிப்பார்கள் என்றும் அவர் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.
இப்படித் தொடர்ந்து இரண்டு பக்கமும் விமர்சனங்கள் வருவதால் தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்ததாகவும், ஆனால் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொண்டதாகவும் ரஜினிகாந்த் மேடையில் நெகிழ்ந்தார். அதாவது, நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்னதான் செய்தாலும், எது பண்ணினாலும் அவர்களுக்கு அது பிடிக்கவே பிடிக்காது என்றும்; அதேபோல, நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும், எது பண்ணினாலும் பிடிக்கும் என்று நினைப்பது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, வாழ்க்கையில் நாம் எப்பொழுதுமே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று தனது தர்மன் பட பூஜை விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் எதார்த்தமாகப் பேசியுள்ளார்.