சென்னை : திரைப்படங்களில் முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகள் சர்வசாதாரணமாகிவிட்ட இன்றைய சூழலில், நடிகை சாய் பல்லவி தனது கொள்கைகளில் மிகவும் உறுதியாக இருப்பது மீண்டும் ஒருமுறை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பாட்காஸ்ட் (Podcast) நேர்காணலில், முத்தக்காட்சியில் நடிப்பது குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் அவரது முதிர்ச்சியையும், தனிப்பட்ட மதிப்பீடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

நேர்காணலில், "இயக்குநர்கள் உங்களை முத்தக் காட்சிகளில் நடிக்கக் கேட்டதுண்டா?" என்ற கேள்விக்கு, "ஆம், பலர் கேட்டிருக்கிறார்கள். நான் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தெளிவாகத் தெரிந்திருந்தும், இன்னும் பலர் என்னிடம் கேட்கத்தான் செய்கிறார்கள்" என்று வெளிப்படையாகப் பதிலளித்தார்.

ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, சாய் பல்லவி அளித்த விளக்கம் மிகவும் ஆழமானது. "எனக்கு ஒரு காதலன் இருந்தால், அது நடிப்பாக இருந்தாலும், வேறு யாரையும் முத்தமிடுவது எனக்கு விருப்பமில்லை. ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியான குடும்பம், வாழ்வதற்கு ஒரு வீடு, வசதிக்கு ஒரு கார் இருந்தால் போதும். எனக்கு அவை ஏற்கனவே இருக்கின்றன. மற்றொரு கார் வாங்குவதற்காகவோ அல்லது வேறு பொருளாதார லாபத்திற்காகவோ என் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை," என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

மேலும், "என் நடிப்பு உங்களுக்குப் பிடித்திருந்தால் என்னை ஒப்பந்தம் செய்யுங்கள்; நெருக்கமான காட்சிகளுக்காகக் கண்டிப்பாக என்னை வற்புறுத்த வேண்டாம். அப்படிப்பட்ட காட்சிகள் தேவைப்பட்டால், தாராளமாக மற்றொரு நடிகையைத் தேர்வு செய்யுங்கள், அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்று மிகவும் கண்ணியமாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.