குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, பட்டதாரிகளுக்கு ரூ.3,000 - வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

May 2, 2023 - 05:16
 0  1

பெங்களுருவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக தேர்தலுக்கான வாக்குறுதிகள் வெளியிட்டார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள, தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில், கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் போட்டிபோட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

இந்த சமயத்தில், கர்நாடகாவில் ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு இலவச வாக்குறுதிகளை பாஜக அளித்திருந்தது. இந்த நிலையில், பெங்களுருவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டார். இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் ரூ.2,000 வழங்கப்படும் என காங்கிரஸ் அதிரடியான வாக்குறுதியை அளித்துள்ளது. அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். வேலை வாய்ப்பில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, வேலை இல்லாத டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,500 என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். கர்நாடக அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம். அதன்படி, கர்நாடகாவில் கேஎஸ்ஆர்டிசி மற்றும் பிஎம்டிசி பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம் வழங்கப்படும். மேலும், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். தினமும் பகலில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 8 மணி நேரம் வழங்கப்படும்.

சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்பட 5 ஆண்டுகளில் ரூ.12,000 கோடி அளவில் நீல பொருளாதாரம் உருவாக்கப்படும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும். 1.5 லட்சம் கோடி 5 ஆண்டுகளில் நீர்ப்பாசன துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேகதாது அணை கட்ட ரூ.9,000 கோடி ஒதுக்கப்படும் என பல்வேறு இலவச வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow