மக்களே மேலதிகாரிகள்.. சிக்கல் இல்லாமல் ரூ.1000... UPSC வெற்றியாளர்கள் மத்தியில் முதல்வர் உரை.!

Jul 13, 2023 - 06:30
 0  1
மக்களே மேலதிகாரிகள்.. சிக்கல் இல்லாமல் ரூ.1000... UPSC வெற்றியாளர்கள் மத்தியில் முதல்வர் உரை.!

மக்களிடம் கனிவாக பழகுங்கள், அவர்கள்தான் நம் உண்மையான மேல் அதிகாரிகள் என முதலமைச்சர் அறிவுரை.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, அண்ணா மேலாண்மை கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்ற 19 பேர் உட்பட குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு மற்றும் வாழ்த்தை தெரிவித்தார்.

இதன்பின் பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது மிகவும் கடமை பொறுப்புமிக்க பதவிகளாகும். இத்தகைய உயர் பதவிகளுக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். உயர்ந்த பதவி என்பது பன்மடங்கு கடமையை உள்ளடக்கியது என்பதே உண்மை. இந்த இடத்திற்கு உயர்த்தியவர்களை மறக்காதீர்கள்.

இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்திவிடாதீர்கள். சமூகத்தைப் பற்றி படியுங்கள். கிராமப்புற மக்களின் வாழ்வானது அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தான் மேம்பட வேண்டும். நாடி வரும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. மக்களிடம் கனிவாக பழகுங்கள், அவர்கள்தான் நம் உண்மையான மேல் அதிகாரிகள். மக்களிடம் தான் நாம் நன் மதிப்பை பெற வேண்டும் என குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சமூகத்தை பற்றி படிக்க வேண்டும். அகில இந்திய தேர்வினை சிறப்பாக எதிர்கொண்ட நீங்கள், அடுத்து வரும் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்வீர்கள் என்று நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் முதல்வர் உரையில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்த உள்ளோம். 1 கோடி மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்க இருக்கிறோம்.

சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற அதிகாரத்தை வழங்கியவர் கலைஞர். மகளிருக்குப் பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதில்தான், என் முழு கவனமும் உள்ளது. எந்த சிக்கலும் இல்லாமல் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

எந்த சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாருக்கெல்லாம் உரிமைத்தொகை அவசியமோ, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டை 5 தலைமுறை ஆட்சி செய்த கலைஞரின் பெயர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow