தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும்... முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

Jul 24, 2023 - 05:41
 0  1
தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும்... முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

1989ல் கலைஞர் தொடங்கி வைத்த சுய உதவி குழுக்கள் தான் பல குடும்பங்களை முன்னேற்றியுள்ளது என முதலமைச்சர் பெருமிதம்.

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். செப்.15ம் தேதி உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான விண்ணப்பதிவு முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர்.

தருமபுரியில் உரிமைத்தொகை திட்டம்:

தமிழ்நாடு முழுவதும் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவி குழுக்கள் திட்டம் 1989ல் தருமபுரியில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரியில் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாமை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் உரை:

தருமபுரியில் முகாமை தொடங்கி வைத்தபின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரியில் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல தலைமுறைகளை கடந்தும் பயனளிக்கும். 1989ல் கலைஞர் தொடங்கி வைத்த சுய உதவி குழுக்கள் தான் பல குடும்பங்களை முன்னேற்றியுள்ளது.

நவீன தமிழ்நாடு:

கலைஞர் கருணாநிதி விதைத்த சுய உதவி குழுக்கள் திட்டம் இன்று மாநிலம் முழுவதும் விருட்சமாக வளர்ந்துள்ளது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைக்கிறோம்.

மகளிர் சுய உதவி குழு:

மகளிர் சுய உதவி குழுக்கள் திட்டத்திற்கு விதைபோட்ட மண் தருமபுரி ஆகும். தமிழகத்தில் சுமார் 4.57 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படுகின்றன என தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசுகையில், கடுமையான நிதி நெருக்கடியிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை அரசு தொடர்கிறது.

கட்டணமில்லா பேருந்து சேவை:

கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் 36 லட்சம் மகளிர் தினந்தோறும் இலவசமாக பயணம் செய்கின்றன. கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.

காலை சிற்றுண்டி:

காலை உணவு திட்டம் மூலம் நாள்தோறும் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இல்லறத்தில் குடும்ப நலனுக்காக பணியாற்றும் பெண்களுக்கு திமுக அரசு அங்கீகாரம் கொடுக்கிறது.

முதல்வர் பெருமிதம்:

எனவே, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே முதன்மையான திட்டமாக கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மாறும் என பெருமிதம் தெரிவித்தார். தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கியுள்ளேன்.

வங்கி கணக்கில் ரூ.1000:

ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதை அந்தந்த மாவட்டம் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். ரூ.1000 உரிமைத்தொகை மாதந்தோறும் வங்கி கணக்கில் நேரடியாக சென்று சேர்ந்துவிடும். எந்த இடையூறும் இல்லாமல் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 தடையில்லாமல் செலுத்தப்படும், யாராலும் தடுக்க முடியாது. கட்டுமான பணியில் ஈடுபடும் மகளிர், மீனவ பெண்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தில் பயன்பெறுவர்.

யாருக்கெல்லாம் ரூ.1000?

யாருக்கெல்லாம் ரூ.1000 அவசியமோ அவர்களுக்கு எல்லாம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.12,000 வங்கி கணக்கு மூலம் மகளிருக்கு செலுத்தப்படும். வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் திட்டம் தீட்டி ஆட்சி செய்து வருகிறோம். அடுத்தாண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow