விளையாட்டிலும் பாரபட்சம்; இந்த ஓரவஞ்சனை நியாயமா? – மநீம

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என மநீம அறிக்கை. 

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. குறிப்பாக, பாஜக ஆளும் குஜராத்துக்கு ரூ.608 கோடியும், அதைவிட பெரிய மாநிலமான தமிழகத்துக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது எவ்வகையிலும் நியாயமற்றது.

அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், பீஹார், டெல்லி, ஹரியானா, இமாச்சல், கேரளா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களைவிட தமிழகத்துக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பயிற்சியாளர்களும் டெல்லிக்கு 121 பேர், அசாமுக்கு 56 பேரை பணியில் அமர்த்திவிட்டு, தமிழகத்துக்கு 18 பேரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளனர்.

தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதிக்கின்றனர். அவர்களை ஊக்குவிப்பதை விடுத்து, மாநிலத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது நியாயமா? மத்திய அரசுக்கு அதிக வரி வசூலித்துத் தரவும், சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தவும் மட்டும் தமிழகம் வேண்டுமா? நிதி ஒதுக்குவதில் ஓரவஞ்சனைதானா?’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு? – மநீம

மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன.

மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) அமைப்பில் 1970 முதல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இந்தியப் பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி உள்பட 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன.

2014-க்குப் பிறகு இருக்கைகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதில் ஹிந்திக்கு 14 இருக்கைகளும், சமஸ்கிருதத்திற்கு 5 இருக்கைகளும், இந்தியக் கல்விக்கு 26 இருக்கைகளும், பிற இருக்கைகளுக்கு 6 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐசிசிஆர் இணையதளத்தில் உள்ள இப்பட்டியலில் செம்மொழியான தமிழ் இடம்பெறவே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி!

இப்படி பல்வேறு விஷயங்களில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பது மத்திய அரசுக்கு அழகல்ல! எல்லா மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மத்திய அரசும், அமைச்சர்களும் இனியாவது இவ்விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு, தமிழ்ச் செம்மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன், தமிழ் மொழி மேம்பாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை எப்போது? மக்கள் நீதி மய்யம் கேள்வி!

பெண்களுக்கு எப்போது மகளீர் உரிமை தொகை வழங்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த“மகளிர் உரிமைத் தொகையானது”திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர்.

ஆட்சிக்கு வந்தபின்னர், “…அனைவருக்கும் வழங்க முடியாது; உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்” என்றார் நிதியமைச்சர். கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார் நிதியமைச்சர்.

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விவாதிக்க முதல்வர், நிதியமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் “மகளிர் உரிமைத்தொகை” திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மக்கள் வலியுறுத்துகிறது.’ என பதிவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி – மநீம பாராட்டு

பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். இதற்கு மநீம பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோயம்புத்தூரில் பயிலும் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி ஓவியா, தமிழகத்தில் முதல்முறையாக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை மடிக்கணினியில் எழுதி, 91.40 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

உதவியாளர் இல்லாமலேயே அவர் இந்த அபார சாதனையைப் புரிந்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வெகுவாகப் பாராட்டுகிறது. சிறிய பிரச்சினைகளுக்கும் தவறான முடிவெடுப்பது, ஆசிரியர்களையே தாக்குவது என கவலைக்குரிய செய்திகள் அணிவகுக்கும் துயர்மிக்க சூழலில், ஓவியாவைப் போன்றவர்கள் ஆறுதலைத் தருகிறார்கள். மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் சாதனைபுரிந்த ஓவியாவை முன்னுதாரணமாகப் பின்பற்ற மாணவர்கள் முன்வர வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு! – மநீம வரவேற்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்புக்கு வரவேற்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும். கள்ள ஒட்டுகளைத் தடுக்கும்.

அதேசமயத்தில் வாக்காளரை வற்புறுத்தி ஆதார் எண்ணைப் பெறக்கூடாது, முழு சம்மதத்துடன் பெற வேண்டுமெனவும் இச்சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தவேண்டும். ஜனநாயகத்தின் அடிநாதமான “நேர்மையான தேர்தலுக்கு” இதுபோன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியமானது. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மக்கள் நீதி மய்யம் அப்பணியை தொடர்ந்து செய்யும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா? – மநீம

நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து மனைவி நிஷாந்திக்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட். 

அரியலூரைச் சேர்ந்த மாணவி நிஷாந்தி நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட் செய்துள்ளது.

அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ? நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்! மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனிதாவில் தொடங்கிய தற்கொலைகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல்,இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் நம் கண்மணிகளின் உயிரை ‘நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா?’ என மத்திவிட்டுள்ளனர்.

இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் – கமலஹாசன்

வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

அந்த ட்விட்டர் பதிவில், ‘கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது. நான் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். ஏரியா சபைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மார்ச் மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.

தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மநீமவின் பணிகள் தொடரும்.’ என பதிவிட்டுள்ளார்.

இதை அரசு வேடிக்கை பார்க்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் – மநீம

உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். 

சேலம் மாவட்டம் மேட்டூரில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மநீம கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக தொடரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல மருத்துவர்கள் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளனர். இதை அரசு வேடிக்கை பார்க்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அரசாணையின்படி ஊதியம் வழங்குதல், கொரனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அவர்கள் போராடுகின்றனர்.

கொரானா காலத்தில் மக்களின் உயிரைக்காப்பதில் மகத்தான பங்காற்றிய மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமை.’ என பதிவிட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் வாழ்க்கை முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? – மநீம

ஆசிரியர்கள் வாழ்க்கை முழுக்க போராடிக்கொண்டே இருக்க வேண்டுமா? மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை

தமிழகத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் வேலைக்காகக் காத்திருக்கும்போது, மிகக் குறைந்த சம்பளத்தில், தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘கொரானாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் குறைந்துள்ளதாக தேசிய சாதனை ஆய்வு அமைப்பு, புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது. தேசிய சராசரியைக் காட்டிலும் கல்வித் தரம் குறைந்துள்ள நிலையில், போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக, தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 எனமிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஆசிரியர்களின் சம்பளத்தில், பாதியாவது தற்காலிக ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்க வேண்டாமா? மிகக் குறைந்த சம்பளத்தில், அதுவும் தற்காலிக அடிப்படையில் பணி வழங்கும்போது, அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

தமிழ்நாடு முழுவதும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழலில், யாரை ஏமாற்ற இந்த பணி நியமன உத்தரவு? அண்மையில் வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன. தாய்மொழியான தமிழ்ப் பாடத்திலேயே 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளை மேம்படுத்தியாக வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

நடப்பாண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,896 கோடி எனும் பிரம்மாண்டமான தொகையை ஒதுக்கிய நிலையில், ஆசிரியர்கள் நியமனத்தை தற்காலிக அடிப்படையில் மேற்கொள்வது ஏன்? தற்காலிக ஆசிரியர் நியமனம் எனும் முடிவை உடனடியாக கைவிட்டு, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவித்துள்ளனர்.

அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம்! – மநீம

‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மநீம வலியுறுத்தல். 

அண்மையில் மத்திய அரசு அறிவித்த ‘அக்னி பாதை’ திட்டம் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்தால், புதிதாக சேருபவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே ராணுவத்தில் பணிபுரிபவர்களும் மனச் சோர்வடைவர்.

முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ‘அக்னி பாதை’ திட்டம், பெயருக்கேற்ப நாடு முழுவதும் ரயில்கள் எரிப்பு, வாகனங்களுக்கு தீவைப்பு என இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் அதிக அளவில் இளைஞர்களை சேர்ப்போம் எனக் கூறி தொடங்கப்படும் இத்திட்டத்தால், தங்களது ராணுவப் பணி கனவு கலைந்துபோய் விட்டதாக புகார் தெரிவிக்கின்றனர் இளைஞர்கள்.
பிஹார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், டெல்லி என பல மாநிலங்களில் பரவிய போராட்டங்கள், தமிழ்நாட்டிலும் தொடங்கிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் கதி என்ன? ஓய்வூதியமும் கிடையாது, அதற்குப் பிறகான வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதமும் கிடையாது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியுமா?
சிறு வயது முதலே ராணுவத்தில் சேர விரும்பி, அதற்காக உடல் தகுதி, தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, குறுகியகால, தற்காலிகப் பணி மகிழ்ச்சியைத் தருமா?

வயது வரம்பு அதிகரிப்பு, துணை ராணுவம், மத்திய பாதுகாப்புப் படை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்றெல்லாம் நம்பமுடியாத சலுகைகளை அறிவித்தாலும், இளைஞர்கள் அவற்றை நம்பத் தயாராக இல்லை.
தேசத்தின் எல்லையைப் பாதுகாக்க, உயிரையே தியாகமாகத் தரும் வேலையை, எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைப்பது சரிவருமா? பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் சலுகைகளை அள்ளித் தரும் மத்திய அரசு, பணத்தால் மதிப்பிட முடியாத ராணுவப் பணியில் சிக்கனம் பார்ப்பது சரியல்ல.

எல்லையைக் காக்க அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மையோடு சேரும் இளைஞர்களை மட்டுமல்ல, ஏற்கெனவே பணிபுரியும் ராணுவ வீரர்களையும் இந்த திட்டம் ஏமாற்றமடையச் செய்யும். ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்களே இதை எதிர்க்கிறார்கள் என்றால், ஏதோ கோளாறு உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாடு முழுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமை. அதேசமயம், தொலைநோக்கற்ற, குறுகிய மனப்பான்மையுடன் கூடிய திட்டங்களை வகுத்து, இளைஞர்களை ஏமாற்றக் கூடாது. ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.’ என மநீம வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version