இடையில் சின்ன சறுக்கல்... அதிமுகவில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜா பேட்டி!

Aug 4, 2023 - 05:17
 0  1
இடையில் சின்ன சறுக்கல்... அதிமுகவில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜா பேட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  நடக்கவுள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ராஜா, 2014-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என பேசியதால் கடந்த 2021ஆம் அண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் மன்னிப்பு கடிதம் அளித்து மீண்டும் சேரலாம் என்ற அறிவிப்பால், தற்போது மீண்டும் இணைந்துள்ளார். 2014-19 காலகட்டத்தில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வாகியிருந்தார் அன்வர் ராஜா. இந்த சமயத்தில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் இணைந்ததால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

எனவே, இபிஎஸ் முன்னிலையில் ஓராண்டுக்கு பின் அதிமுகவில் மீண்டும் அன்வர் ராஜா இணைந்துள்ளார். அதிமுகவில் இணைந்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்வர் ராஜா, இடையில் சிறு சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைத்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன். ஆனால், விலகி இருந்தாலும் அதிமுகவினர் குடும்ப நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றேன், என்னை யாரும் தடுக்கவில்லை.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை தவிர பாஜக உடன் அனைவரும் கூட்டணி வைத்துள்ளனர்.  பாஜக மீதான விமர்சனம் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கைக்கு இடர்பாடுகள் வந்தால் எந்த கூட்டணியாக இருந்தாலும் வெளியேற அதிமுக தயங்கியது இல்லை. மேலும், எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை, மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow