ஜூலை 17-ல் பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Jul 13, 2023 - 05:34
 0  1
ஜூலை 17-ல் பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி பெங்களூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபக்கம், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நித்திஸ்குமார் தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். பாஜகவை எதிர்க்க எடுக்கப்பட வேண்டிய திட்டங்கள், பொது வேட்பாளர் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இரண்டாவது எதிர்க்கட்சி கூட்டம் பெங்களூருவில் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாட்னாவில் கூட்டத்தில் 16 கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பெங்களூரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் இருந்து திமுக, மதிமுக, விசிக கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்கட்சிகள் 2வது கூட்டத்தில் பங்கேற்க வரும் 17ம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பெங்களூர் செல்கிறார். பெங்களுருவில் காங்கிரஸ் தலைமையில் ஜூலை 17, 18ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow