முடிவெட்ட சொன்னதால் +2 மாணவர் தற்கொலை… தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.!

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதேஷ்வரன் எனும் மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாதேஸ்வரன் , புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரம் ஊரை சேர்ந்த கண்ணையா என்பவரின் மகனாவார்.

மாதேஸ்வரன் அதிகமாக மூடிவைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் அடிக்கடி மாதேஸ்வரனை முடிவெட்ட சொல்லி வந்துள்ளனர். ஆனால் மாதேஸ்வரன் முடிவெட்டாமல் இருந்துள்ளார். . நேற்று அதே போல முடிவெட்டாமல் மாதேஸ்வரன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது பிற்பகல் தேர்வு இருந்துள்ளது. தேர்வு எழுத வேண்டும் என்றால் முடிவெட்டி விட்டு வரவேண்டும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதனால் காலை 11 மணியளவில் மாதேஸ்வரன் பள்ளியை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மாலை வெகு நேரம் ஆகியும் மாணவன் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் , உறவினர்கள், நண்பர்கள் மாணவனை தேடி அலைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் மாணவன் மாதேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து மாணவன் மாதேஸ்வரன் தற்கொலை மரணத்திற்கு ஆசிரியர்கள் தான் காரணம். அதனால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவரம் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கலைக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று கல்வி அதிகாரிகள் மச்சுவாடி அரசு பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.