#BREAKING : ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்த உச்சநீதிமன்றம்..!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்பதால், தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மிலானியின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர், தேர்தல் அதிகாரிகள், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின் இவ்வழக்கில் கடந்த ஜூலை-6 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அதன்படி, ஓ.பி.ரவீந்திரநாத் 2019 தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கையினை ஏற்று, வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து, தேர்தல் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேனி எம்.பி.ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் தரப்பு மற்றும் எதிர்மனுதாரர் தரப்பு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், வழக்கு விசாரணையை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.