சூடான்: ராணுவம், துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்..! ஒரு இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழப்பு..!

Apr 16, 2023 - 06:46
 0  1

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள பயங்கர மோதலில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான ஆர்எஸ்எஃப்-ன் (RSF) நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் ராணுவ மோதல் நிலவி வருகிறது.

தற்பொழுது, சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள பயங்கர மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். சூடான் மருத்துவர்கள் குழு, ஏராளமான இராணுவ வீரர்கள் இறந்துவிட்டதாகவும், குறைந்தது 595 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறியது.

மேலும், கப்காபியாவில் உள்ள இராணுவ தளத்தில் ஆர்எஸ்எஃப் (RSF) மற்றும் ஆயுதப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உணவு உதவி வழங்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பான உலக உணவுத் திட்டத்தின் (WFP) மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

சூடானின் துணை ராணுவ ஆதரவு படைகள், ஜனாதிபதி மாளிகை, ராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானின் இல்லம் மற்றும் கார்ட்டூமின் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. சூடானில் பரபரப்பான சூழல் நிலவுவதால் சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow