மணிப்பூர் ஆயுதக்கிடங்கில் கொள்ளை..! ஏகே-47 உட்பட 19,000 தோட்டாக்கள் திருட்டு..!

Aug 4, 2023 - 07:04
 0  1
மணிப்பூர் ஆயுதக்கிடங்கில் கொள்ளை..! ஏகே-47 உட்பட 19,000 தோட்டாக்கள் திருட்டு..!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே வன்முறை வெடித்து, 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள நாரன்சீனாவில் அமைந்துள்ள 2வது இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (IRB) பட்டாலியன் தலைமையகத்தில், ஒரு கும்பல் உள்ளே புகுந்து அதிநவீன ஆயுதங்களைக் கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது மணிப்பூர் ரைபிள்ஸைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆயுதக்கிடங்கை சூறையாடிய கொள்ளையர்கள், அங்கிருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, பல இலகுரக இயந்திர துப்பாக்கிகள், கைக்குண்டுகள், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் 19,000 க்கும் மேற்பட்ட தோட்டாக்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குக்கி மற்றும் மெய்தேயி சமூகத்தினரிடையே மோதல் தொடங்கியதிலிருந்து, 4,000க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் லட்சக்கணக்கான வெடிபொருட்கள் காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,600 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்தது.

மேலும், மணிப்பூர் டிஜிபி தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகி விளக்கங்களை அளிக்க வேண்டும். மேலும், மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது. போலீசாரின் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள் என எதையும் பகிரக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow