தெலங்கானா மாநில அரசு ஒத்துழைப்பு தராதது வேதனை – பிரதமர் மோடி பேச்சு

மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தடுக்க வேண்டாம் என மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் பேச்சு.

தெலுங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். அதன்படி, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களுக்கு தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைப்பு தராதது வேதனை அளிக்கிறது. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தடுக்க வேண்டாம் என மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அரசின் ஆதரவின்மையால், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் காலதாமதமடைகின்றன. இது தெலுங்கானா மக்களுக்கு ஏற்படும் இழப்பு என தெரிவித்தார். மேலும், நான் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆனது நம்பிக்கை, நவீனத்துவம், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலாவை இணைக்கும் எனவும் கூறினார். இதனிடையே, தெலுங்கானாவில் செகந்திராபாத் – திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.

மத்திய அரசுக்கும், தெலுங்கானா அரசுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை தெலுங்கானா முதலமைச்சர் கேசிஆர் புறக்கணித்து வருகிறார். அந்தவகையில், இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் புறக்கணித்துள்ளார்.

Leave a Comment