காவேரி நீர் விவகாரம் : பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

காவேரில் இருந்து காவேரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இதனை குறிப்பிட்டு ஏற்கனவே, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு முறை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், காவேரி நதியில் இருந்து மேட்டூர் அணைக்கு வந்துள்ள தண்ணீரில் 2023 ஆகஸ்ட் 3வரை கணக்கீட்டின் படி, 26 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனை வைத்துக்கொண்டு, அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய முடியும்.

ஆனால், தமிழகத்தில் காவேரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள குருவை நெல் சாகுபடிக்கு இன்னும்  45 நாட்களுக்கு தண்ணீர் தேவை. கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 19ஆம் தேதிகளில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து காவேரி விவகாரம் குறித்து தமிழக தரப்பில் உள்ள கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்.

காவேரி மேலாண்மை வாரிய உத்தரவுபடி குறிப்பிட்ட அளவு தண்ணீரை திறந்து விட கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கர்நாடக அரசு ஏற்கனவே நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரை திறந்து விட்டனர். கர்நாடகாவில் உள்ள நீர்நிலைகளில் 80 விழுக்காடு நீர் இருந்தும் கர்நாடக அரசு நீர் திறக்கவில்லை. ஏற்கனவே பாசுமதி அரிசி தட்டுப்பாட்டால் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. அதே போல, காவிரி டெல்டாவில் உள்ள குருவை நெல் சாகுபடி ஆகிவிடக்கூடாது என குறிப்பிட்டு, இந்த காவேரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட கோரி அறிவுறுத்தும் படி மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிடும் படி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.