No-Confidence Motion Live: பிரதமர் மோடி மக்களவை வருகை..!

Aug 10, 2023 - 06:06
 0  1
No-Confidence Motion Live: பிரதமர் மோடி மக்களவை வருகை..!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விரிவான விவாதத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்காத காரணத்தால், நாடாளுமன்ற மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அவர் பேசுகையில், மணிபூரை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை. மணிப்பூர் சம்பவத்தில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது. பாரத மாதாவை அவர்கள் கொன்று விட்டார்கள் என பல்வேறு காட்டமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இரானி, தேச வரலாற்றில் முதன்முறையாக, ‘பாரத் மாதா’ கொலையைப் பற்றி ஒருவர் பேசினார். அதற்கு காங்கிரஸ் தொடர்ந்து கைதட்டுகிறது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என்று கூறினார்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ் என்று கூறினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதனால் நேற்று நாடாளுமன்ற மக்களவை பெரும் பரபரப்பாக இருந்தது. இரண்டு நாள் விவாதம் முடிந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். இன்று பிரதமர் மோடி பதிலுரை அளித்த பின்பு குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இதற்கிடையில், பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்ற பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை தந்துள்ளார். “பாரத் மாதா கி ஜெய்” என முழக்கமிட்டு, மேஜைகளை தட்டியும் பாஜக எம்பிக்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow