ஒடிசாவில் மூன்று ரயில் விபத்து! உயிரிழந்தோர் எண்ணிக்கை 261-ஆக உயர்வு!

ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 261-ஆக அதிகரிப்பு.

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 261-ஆக உயர்ந்துள்ளது என்று தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஆதித்ய குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும், ரயில் விபத்தில் காயமடைந்த கிட்டத்தட்ட 650 பயணிகள் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அவர் கூறுகையில், விபத்தில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்று அதிகாலை, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சிஆர்எஸ்) விசாரணை நடத்துவார் என்றும் தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கொல்கத்தாவிற்கு தெற்கே 250 கிமீ தொலைவிலும், புவனேஸ்வரில் இருந்து வடக்கே 170 கிமீ தொலைவிலும் உள்ள பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த ரயில் விபத்து நடந்துள்ளது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.