Cauvery Issue: ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துக.. கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Sep 21, 2023 - 06:14
 0  1
Cauvery Issue: ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துக.. கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்க முடியாது என கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை மற்றும் உத்தரவுகள் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த மறுத்து வருகிறது கர்நாடக அரசு.

இந்த நிலையில், இதனை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. தமிழகத்திற்கு 2,500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என திட்டவட்டமாக கர்நாடக அரசு வாதம் வைத்துள்ளது. குடிநீர் பிரச்சனை, நீர்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவை பின்பற்ற இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. செப்.13ம் தேதி முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  5,000 கன அடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்தநிலையில் , தற்போது தமிழ்நாடு - கர்நாடக இடையே நதிநீர் தொடர்பான வழக்கில் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டு, ஆணையம் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow