தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி

Jun 19, 2023 - 06:33
 0  1
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் கடந்த மாதம் தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார்.

மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் எவை என்பது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். டாஸ்மாக் மதுபான கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, இதய அறுவை சிகிச்சையாக சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சமயத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு துறைகளான மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறைகளை, இரு வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால், செந்தில் பாலாஜி குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அமைச்சராக தொடரமுடியாது எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சார துறையும், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு மது விலக்கு ஆயத்தீர்வை துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை, டாஸ்மாக்கில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து சரி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow