மணிப்பூர் விவகாரத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.! பாஜக எம்பி ஸ்மிருதி இரானி பேச்சு..!

Aug 9, 2023 - 07:01
 0  0
மணிப்பூர் விவகாரத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.! பாஜக எம்பி ஸ்மிருதி இரானி பேச்சு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

பிறகு இரு அவையும் இன்று காலை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதோடு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரின் தகுதி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற்ற மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவியை வழங்கியது.

ராகுல் காந்தி பேச்சு:

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதமானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறுகிற நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில், தன்னை மீண்டும் மக்களவை உறுப்பினராக மீண்டும் அமர்த்திய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் கடந்த முறை அதானியை பற்றி பேசியது உங்களை காயப்படுத்தியிருக்கலாம். அதனால் உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டார். அந்த வலி உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று நான் அதானியைப் பற்றி பேசவில்லை. எனவே, பாஜக நண்பர்கள் பயப்பட தேவையில்லை என்று கூறிய ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்பு, நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் இன்று வரை செல்லவில்லை, ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல என்று கூறினார்.

தொடர்ந்து, நான் 'மணிப்பூர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன், ஆனால் மணிப்பூர் இனி இருக்காது என்பதே உண்மை. மணிப்பூரை இரண்டாகப் பிரித்து விட்டீர்கள். மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து உடைத்துவிட்டீர்கள் என்று கூறினார்.

மேலும், பாஜகவின் அரசியல் மணிப்பூரை கொல்லவில்லை. மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டது. மணிப்பூரில் அவர்கள் இந்தியாவை கொன்றுவிட்டனர். மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம், நீங்கள் பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் இல்லை. தேசத்துரோகிகள். நீங்கள் பாரத மாதாவின் பாதுகாவலர்கள் அல்ல என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார். ஸ்மிருதி இரானி பேச்சு:

ராகுல் காந்தியின் பேச்சு மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது, மணிப்பூர் குறித்த அவரது அறிக்கைகளுக்கு ஆளும் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பேச்சுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேச வரலாற்றில் முதன்முறையாக, 'பாரத் மாதா' கொலையைப் பற்றி ஒருவர் பேசினார். அதற்கு காங்கிரஸ் தொடர்ந்து கைதட்டுகிறது.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஊழல்வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இந்தியா அல்ல, இந்தியாவில் ஊழலை நீங்கள் வரையறுக்கிறீர்கள். மணிப்பூர் பிரிக்கப்படவில்லை. இது இந்தியாவின் ஒரு பகுதி என்று கூறினார். இதற்கிடையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ராஜஸ்தான் செல்வதற்காக நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். அவர் சென்ற பிறகு ராகுல் காந்தி ராஜஸ்தானுக்குச் சென்றுள்ளார். அதே இடத்தில் ஒரு பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டது. அவர்கள் மேற்கு வங்காளத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்கவில்லை.

சட்டப்பிரிவு 370 மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், சட்டப்பிரிவு 370 இந்தியாவில் ஒருபோதும் மீண்டும் நிறுவப்படாது என்று சபையை விட்டு வெளியேறியவர்களுக்கு (ராகுல் காந்தி) நான் சொல்ல விரும்புகிறேன் என எம்பி ஸ்மிருதி இரானி கூறினார்.

மேலும், மணிப்பூர் விவகாரத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பலமுறை கூறியும், எதிர்க்கட்சிகள் அதிலிருந்து ஓடிவிட்டன, நாங்கள் ஓடவில்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow