அதிமுக மாநாட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு.. ஐகோர்ட் கிளை உத்தரவு!

அதிமுக எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநடு இதுவாகும்.

இதனால் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டிற்கு வருவோருக்கு குடிநீர் வசதி, உணவு, வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி, இதற்கான பணியில் மதுரை மாவட்ட அதிமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்த வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

அதிமுக மாநாட்டிற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சனை ஏற்படாத வகையில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மதுரை எஸ்பிக்கு உத்தரவிட்டு, ஆர்பி உதயகுமார் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது மதுரை உயர்நீதிமன்றம்.