ஆளுநர் ரவி நல்ல மனிதர் தான்.. உணர்ச்சிவசப்பட்டு இப்படி செய்து இருப்பார்.! சபாநாயகர் அப்பாவு பேட்டி.!

Jun 30, 2023 - 06:12
 0  0
ஆளுநர் ரவி நல்ல மனிதர் தான்.. உணர்ச்சிவசப்பட்டு இப்படி செய்து இருப்பார்.! சபாநாயகர் அப்பாவு பேட்டி.!

ஆளுநர் நல்லவர் தான். உணர்ச்சிவசப்பட்டு நேற்று அறிக்கை வெளியிட்டு இருப்பார் என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவல் கட்டுப்பாட்டில் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவிட்டார். பின்னர் எதிர்ப்புகள் வந்த நிலையில், ஆளுநர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆளுநரின் இந்த செயல்பாடுகள் குறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை எனவும், இந்த விவரம் ஆளுனருக்கு 4 அரை மணிநேரத்தில் தெரிந்துவிட்டது. அதனால் தான் உடனடியாக இந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், அத்வானி துணை பிரதமராக இருந்தார். முரளி மனோகர் ஜோஷி மத்திய மனித வள மேம்பாட்டு திட்ட அமைச்சராக இருந்தார். அப்போது அவர்கள் மீது ராமர் கோவில் இடித்தது சம்பந்தமான வழக்கு இருந்தது. இருவரும் அந்த பதவியை வைத்து கொண்டுதான் நீதிமன்ற காவலில் இருந்தார்கள். கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றம் சென்றார்கள். என குறிப்பிட்ட அப்பாவு, ஆளுநருக்கு அமைச்சரை நீக்கம் செய்ய முடியாது. ஆளுநருக்கு உரிமை கிடையாது.

ஒரு மாநில ஆளுனர், முதலமைச்சராக பதவி ஏற்றிக்கொள்ளுங்கள் என தேர்தலில் பெரும்பான்மை வகித்தவர்களை சொல்லி பதவி பிரமாணம் மட்டும் தான் செய்து வைக்க முடியும். அதுமட்டுமே அவர்கள் உரிமை. அதன் பிறகு முதல்வர் கொடுக்கும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மட்டுமே செய்து வைக்க முடியும். அமைச்சர்கள் வேண்டுமென்றால் ராஜிணாமா செய்யலாம். இல்லையேல், நீதிமன்றத்தில்  2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றால் அமைச்சர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற போது ஓபிஎஸ் தான் முதல்வராக இருந்தார் என குற்பிட்ட  சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ரவி ரெம்ப நல்ல மனுஷன் தான். நான் நிறைய முறை அவரை சந்தித்துள்ளேன். அவர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார். அப்படி தான் தேசிகீதம் ஒலிக்கும் முன்னரே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிவிட்டார். மதசார்பற்ற நாடுனு இருக்கு. மதமுள்ள நாடு தான் என கூறுகிறார். அது போல நேற்று வெளியிட்ட அறிக்கையையும் உணர்ச்சிவசப்பட்டு கூறி இருப்பார் என்றே நினைக்கிறன் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி , முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையில் கொடுக்கப்பட்ட பரிந்துரை படி செயல்பட்டால் போதுமானது என சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow