எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று. எனவே, அவருடைய நினைவு தினத்தையொட்டிஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மக்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன், மன்சூர் அலிகான் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில்  மலர்தூவி மரியாதை செய்தார். இதற்கு முன்னதாக சென்னையில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்து இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மரியாதை செலுத்திய போது அவருடன்  மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகளும் தங்களுடைய மரியாதை மலர் தூவி செலுத்தினர். அதைப்போலவே பொதுமக்கள் பலரும் மரியாதை செலுத்தினர்கள்.

மரியாதை செலுத்தியதுடன் எடப்பாடி பழனிசாமி  தனது எக்ஸ்வலைத்தள பக்கத்தில் ” நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் வீரிய விருட்சத்தின் விலை மதிக்க முடியாத விதை, தமிழகத்தில் இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கிட அயராது பாடுபட்ட பாரத ரத்னா, ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித்தலைவர், சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகர், என்றும் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் மன்னாதிமன்னன் MGR  புரட்சித்தலைவர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்” என்றும் கூறியுள்ளார்.