மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கேதராஜா அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தும், வேகமாக வந்த கண்டெய்னர் லாரியும் மோதிக் கொண்டதில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பை-நாக்பூர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் புனேயில் இருந்து மகேகருக்குச் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. பின் எதிரே அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்பு மற்றும் அவசரகால மருத்துவக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சிந்தகேதராஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் ஷேக் குலால், அரசு போக்குவரத்து கழக ஊழியர் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.