சட்டத்தில் இந்தியாவிற்கு பதில் பாரத் என பெயர் மாற்றும் மசோதா.! அமித்ஷா தாக்கல்

Aug 11, 2023 - 07:57
 0  1
சட்டத்தில் இந்தியாவிற்கு பதில் பாரத் என பெயர் மாற்றும் மசோதா.! அமித்ஷா தாக்கல்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது, இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் அமித்ஷா. அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை "பாரதிய நியாய சங்ஹீத" என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை "பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத" என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை "பாரதிய சக் ஷயா" என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். அமித்ஷா கூறுகையில், இந்தச் சட்டத்தின் கீழ், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்து செய்கிறோம். 1860 முதல் 2023 வரை, நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது. மூன்று சட்டங்கள் மாற்றப்பட்டு, நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும் என்றார்.

இந்த மசோதாவின் கீழ், தண்டனை விகிதத்தை 90%க்கு மேல் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். அதனால்தான், 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கும் பிரிவுகள், அனைத்து வழக்குகளின் கீழும் தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திற்குச் செல்வது கட்டாயமாக்கப்படும் என்ற முக்கிய விதியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் பாஜக எம்பி மக்களவையில் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow