இதுதான் திமுக அரசு கடைப்பிடிக்கும் சமத்துவமா? - சீமான்

Apr 11, 2023 - 06:59
 0  0

நொச்சிக்குப்பம் பகுதியில் நிலம் வழங்கிய அனைத்து மீனவக் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம் பகுதியைக் கையகப்படுத்தி அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரு தலைமுறையைக் கடந்து விரிவடைந்துள்ள மீனவ மக்களின் குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடுகளை வழங்காமல், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வீடுகள் வழங்க முன்வந்துள்ளது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மேலும், நொச்சிக்குப்பம் பகுதி அல்லாத, பிற பகுதி மக்களுக்கும் அவ்வீடுகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பது நொச்சிக்குப்பம் பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி, தங்களுக்கு உரிமையான வீட்டினை பெறுவதற்கு, வீடு ஒன்றிற்கு. 5,29,000 ரூபாய் வழங்க வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அம்மக்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வசூலிப்பதென்பது அப்பட்டமான பகற்கொள்ளையாகும்.

இந்திய ஒன்றிய அரசின் நிதி உதவியுடனும், தமிழ்நாடு அரசின் பங்களிப்புடனும் ஏழை மக்களுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு 5 இலட்ச ரூபாய் அளவிற்குக் கட்டாய நிதிப்பெறப்படுவது ஏன்? இலவச வீடு வழங்கும் திட்டம் என்று கூறிவிட்டு, இலட்சக்கணக்கில் நிதி வசூலிப்பதற்குப் பெயர்தான் திமுக அரசின் 'திராவிட மாடலா?.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு வீடு வழங்க திமுக அரசு மறுப்பது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைப்பிடிக்கும் சமத்துவமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, நொச்சிக்குப்பம் பகுதியில் விரிவடைந்துள்ள அனைத்து மீனவ குடும்பங்களுக்கும், அனைத்து வாரிசுகளுக்கும், எவ்வித கட்டாய நிதியும் பெறப்படாமல் போதிய அளவில் வீடுகள் வழங்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.' என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow