ரூ.18 லட்சம் செலுத்திவிட்டு அரசு பங்களாவை காலி செய்யுங்கள்..! மத்திய அரசு

இந்திய மகளிர் பத்திரிகைப் அமைப்பிடம் ரூ.18 லட்சம் செலுத்திவிட்டு அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசு கூறியுள்ளது. 

இந்திய மகளிர் பத்திரிகைப் அமைப்பிடம் (IWPC) ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை அனுமதியின்றி ஆக்கிரமித்ததற்காக ரூ.18 லட்சத்தை நஷ்டஈடாகச் செலுத்தும்படியும், அந்த பங்களாவை விரைவில் காலி செய்யுமாறும் கூறியுள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால் வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

லுட்யன்ஸின் டெல்லியில் உள்ள வின்ட்சர் பிளேஸில் உள்ள பங்களாவை விட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதிக்குள் காலி செய்யமாறு இந்திய மகளிர் பத்திரிகைப் அமைப்பிற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் எஸ்டேட் இயக்குநரகம் கூறியுள்ளது. ஆனால், காலக்கெடு தாண்டியபோதிலும் இன்னும் காலி செய்யப்படவில்லை என எஸ்டேட் இயக்குநரகத்தின் துணை இயக்குனர் பினாகி பானர்ஜி, இந்திய மகளிர் பத்திரிகைப் அமைப்பிற்கு கடிதம் எழுதினார்.

அவர் எழுதிய கடிதத்தில், ஆகஸ்ட் 1, 2022 முதல் ஏப்ரல் 10, 2023 வரை அரசு பங்களாவை ஆக்கிரமித்ததற்காக மொத்தம் ரூ.18.8 லட்சத்தை நஷ்டஈடாக செலுத்த வேண்டும் என்றும் நஷ்டஈட்டைச் செலுத்தி, பங்களாவை காலி செய்யத் தவறினால், பங்களாவை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் எஸ்டேட் இயக்குநரகத்திலிருந்து தங்களுக்கு கடிதம் வந்துள்ளதாகவும், இதனைப் பற்றி விவாதித்து அரசாங்கத்திற்கு பதிலளிப்போம் என ஐடபிள்யூபிசியின் அலுவலக அதிகாரி கூறினார். மேலும், ஆகஸ்ட் 2021-ல் மத்திய அரசு, ஐடபிள்யூபிசிக்கு வெளியேற்ற அறிவிப்பை வெளியிட்டு அவர்களது நிலுவைத் தொகையை செலுத்துமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment