தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஏழு கிராம மக்கள் பேரணி!

தூத்துக்குடி மடத்தூரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, 18 பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பேரணியாகச் சென்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக  திரண்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், தீவிர உடல் நலக் கோளாறுகளும் ஏற்படுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழு சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக முற்றுகைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலைக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பேரணியாகச் சென்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, குமரெட்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மாதா கோவில் பகுதி, பாத்திமா நகர் உள்ளிட்ட 18 பகுதிகளை சேர்ந்த மக்கள் மடத்தூரில் திரண்டுள்ளனர். அங்கிருந்து ஊர்வலமாக புறவழிச்சாலை வழியாகச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். எனவே ஊர்ச்சாலை வழியாகச் செல்ல அனுமதி கேட்டனர்.

இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியதால் பேரணி விரைவில் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் திரண்ட வண்ணம் உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment