5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியது உண்மை!சென்னை காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு!கைதாக வாய்ப்பு?

சென்னை காவல் உதவி ஆணையர் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிக்கிய நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13 ஆம் தேதி இரவு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் திருமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது உதவி ஆணையர் கமீல் பாஷா மேஜை லாக்கரில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் கூட்டு சோதனையின் போது கொரட்டூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வம் என்பவர் உதவி ஆணையர் கமில் பாஷாவை சந்திக்க வந்துள்ளார்.

அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் சோதனை செய்ததில் 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். மேலும் ஒப்பந்ததாரர் செல்வத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் உதவி ஆணையர் கமில் பாஷாவுக்கு கொடுத்த பணத்தின் கணக்கு எழுதிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மொத்தமாக கைப்பற்றப்பட்ட 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் பணம் குறித்து உதவி ஆணையர் கமில் பாஷா அளித்த விளக்கம் ஏற்றுகொள்ளும் படி இல்லை என லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் உதவி ஆணையர் கமீல் பாஷா மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த லஞ்ச புகார் குறித்து இன்னும் முழுமையான தகவல் பெறுவதற்காக கமில் பாட்சா மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதே வேளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் உதவி ஆணையர் கமில் பாட்சா விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment