பலத்தை அதிகரிக்க பாரதிய ஜனதா கட்சி மும்முரம்…!இறுதியில் வெற்றி யாருக்கு ?

இன்று உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 25 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்  நடக்கிறது. மத்திய அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், இன்றைய தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்குவங்கம், தெலங்கானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 58 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. இதற்கான தேர்தல் இன்று நடக்கும் நிலையில், ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் உட்பட 33 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.

இவர்களில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் மட்டும் 19 பேர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேர். இந்நிலையில் காலியாக உள்ள 25 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று தேர்தல் நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். பின்னர் மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

உத்தரபிரதேசத்தில் இருந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் அபிஷேக் மனு சிங்வி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர். இது தவிர கர்நாடகத்தில் 4 பேரும், ஜார்க்கண்டில் 3 வேட்பாளர்களும், சத்தீஸ்கரில் 2 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் இடைத்தேர்தலில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதியை மற்றொரு எதிர்க்கட்சியான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரித்தது. இதன் பலனாக, 2 மக்களவை தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி  வெற்றி பெற்று பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தது.

இந்நிலையில், மாநிலங்களவையில் குறைந்தது 2 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் வசம் 19 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு மேலும் 18 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்த அக்கட்சியின் மூத்த தலைவரான நரேஷ் அகர்வாலின் மகன் நிதின், சமாஜ்வாதி எம்எல்ஏவாக உள்ளபோதிலும், அவர் அணி மாறி பாரதிய ஜனதாவுக்கு வாக்களிப்பார் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதனால், பகுஜன் சமாஜ் கட்சிக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சமாஜ்வாதி கட்சிக்கு மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சியின் வேட்பாளர் ஜெயா பச்சன் மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகிவிட்டது. அக்கட்சியில் எஞ்சியுள்ள 10 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 7 எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் ஒரு எம்எல்ஏவின் ஆதரவு கிடைத்தால் பகுஜன் சமாஜ் வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார். சமாஜவாதியில் சில அதிருப்தி எம்எல்ஏக்கள் இருப்பதால் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவையும் மாயாவதி கோரி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment