நிர்மலாதேவியிடம் மதுரை மத்திய சிறையில் 5 மணி நேரம் விசாரணை!அப்படி என்ன நடந்தது விசாரணையில் ?

விசாரணை அதிகாரி சந்தானம் ,மதுரை மத்திய சிறையில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரித்தார். நிர்மலாதேவியிடம் இருந்து சில முக்கிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக செல்போனில் பேசினார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளம், ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களின் பெயர்களை இணைத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து நிர்மலாதேவியை கடந்த 16-ம் தேதி கைது செய்தனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆடியோ விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் என்பவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார்.

இவர் மதுரையில் பல்கலைக்கழக துணைவேந்தர் பிபி. செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அருப்புக்கோட்டையில் நிர்மலாதேவி பணிபுரிந்த கல்லூரி நிர்வாகத்தினர், புகார் அளித்த மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் தனது 2-ம் கட்ட விசாரணைக்காக நேற்று முன்தினம் மதுரை வந்தார் சந்தானம். அரசு சுற்றுலா மாளிகையில் மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கே. கூடலிங்கத்திடம் விசாரணை மேற்கொண்டார். நிர்மலாதேவியின் பணி, அவர் மீது கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை கேட்டறிந்து சில ஆவணங்களைப் பெற்றார். தொடர்ந்து காமராசர் பல்கலைக்கழகத்துக்குச் சென்று துணைவேந்தர், பதிவாளர் உட்பட பேராசிரியர்கள், அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

தமிழக சிறைத் துறை கூடுதல் டிஜிபியின் சிறப்பு அனுமதியின் பேரில் நேற்று காலை 9.30 மணிக்கு மதுரை மத்திய சிறைக்கு சந்தானம் சென்றார். சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நிர்மலாதேவியிடம் விசாரணை செய்தார். மூன்றரை மணி நேரம் விசாரணை நீடித்தது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டது. முக்கிய தகவல்களை தனது பெண் உதவியாளர்கள் மூலம் பதிவு செய்தார். விசாரணையின்போது வீடியோ வும் எடுக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 1.20 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்தார் சந்தானம்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காலை 9.30 முதல் 1 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தினோம். விசாரணைக்கு அவர் நன்றாக ஒத்துழைத்தார். அவரிடம் நடத் திய விசாரணை தொடர்பான முக் கிய தகவல்களை எழுத்துப்பூர்வ ஆவணமாகப் பெற்றேன். விசாரணை பற்றி எதையும் இப்போது கூற முடியாது என்றார். பின்னர் பிற்பகலில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நிர்மலாதேவியிடம் அவர் விசாரணையைத் தொடர்ந்தார்.

மதுரையில் சிறையில் விசாரணை நடத்துவதற்காக அதிகாரி சந்தானம் வருவதை அறிந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள், செய்தியாளர்கள் சிறை வாசலில் குவிந்தனர். விசாரணை முடித்து சந்தானம் காரில் வெளியே வந்தார். 4 மணி நேரத்துக்கும் மேலாக சிறை வாசலில் காத்திருந்த செய்தியாளர் மற்றும் புகைப்படக்காரர்கள் அவரை நெருங்க முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதை பார்த்த சந்தானம், காரை விட்டு இறங்கிவந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment