சுரப்பா நியமனத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் கைது!

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியினர்  அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா நியமனத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை பானகல் மாளிகை அருகே திரண்ட தேமுதிகவினர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காரில் அமர்ந்தபடியே முழக்கம் எழுப்பினார்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா காருக்கு வெளியே நின்று முழக்கம் எழுப்பினார். அப்போது தொண்டர்கள் முண்டி அடித்ததால், அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி அவர்களை விரட்டி அடித்தார்.

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்தனர். இதையடுத்து, பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகே, ஜனநாயக மாதர் சங்கத்தினரும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரை கண்டித்தும், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி முன்னேற முயன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை, போலீசார், குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே, அனைந்திந்திய மாணவர் பெருமன்றம், அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். அண்ணா பல்கலைகழகம், அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகம் ஆகியனவற்றின் துணைவேந்தர் நியமனங்களை ரத்துச் செய்யக்கோரி முழக்கமிட்டவாறு சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment