கர்நாடகாவில் முதலில் காலாவிற்கு எதிர்ப்பு,பிறகு மாறுவேடத்தில் காலா படம் பார்த்த கன்னட அமைப்பினர்!

க‌ர்நாடகாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் கடந்து  170-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது.

நேற்று முன்தினம்  இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வெளியானது. காவிரி விவகாரத்தில் ரஜினி தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலாவுக்கு கர்நாடகாவில் தடை விதித்தது.

படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து தடை நீக்கப்பட்டது. இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ் அலுவலகத்தை தாக்கினர். இதனால் நேற்று முன்தினம் காலை காலா வெளியாகாததால் ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில் மாலையில் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஐநாக்ஸ், பிவிஆர், சினி போலிஸ் உள்ளிட்ட மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலா வெளியானது.

இந்நிலையில் நேற்று முன்தினம்  காலை முதல் பெங்களூருவில் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமல்லாமல் நட்ராஜ், பாலாஜி, சீனிவாஸ், ஊர்வசி உட்பட 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் காலா வெளியாகி திரையரங்குகள் நிறைந்தன.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காலா திரைப்படத்துக்கு எதிராக போராடிய கன்னட சலுவளி கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே போன்ற அமைப்பினர் நேற்று போராடவில்லை. இதைத் தொடர்ந்து கன்னட அமைப்பினர் வழக்கான வெள்ளை உடை மற்றும் துண்டு அணியாமல் திரையரங்கின் முன்பாக குவிந்தனர்.

ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற‌ வண்ண உடை அணிந்து கொண்டும், தொப்பி அணிந்து கொண்டும் திரையரங்கிற்கு வந்து காலா திரைப்படத்தை கண்டு களித்துள்ளனர். விவேக்நகர் பாலாஜி திரையரங்கில் மாறுவேடத்தில் காலா திரைப்படத்தை கண்டு ரசித்த கன்னட அமைப்பினரைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தியேட்டர்களின் எண்ணிக்கை 130-லிருந்து 170-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனகபுரா சீனிவாஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment