அரசு சத்துமாவு கள்ளச்சந்தையில் விற்கப்படும் அவலம்!மாட்டுத்தீவனமாகும் அவலம்

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படவேண்டிய சத்துமாவு பாக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் மாட்டுத்தீவனமாக விற்பனை செய்யப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க அரசு முன்னெடுத்த திட்டம் விளலுக்கு இறைத்த நீராகும் பரிதாபம்.

தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சமூக நல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஏழை குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வளர்ந்து, எதிர்காலத்தில் கல்வி கற்று பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மத்திய அரசால் 1975ம் ஆண்டு பால்வாடி எனும் அங்கன்வாடி மையங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழக சமூக நலத்துறை மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டும் 1336 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இங்கு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவுகள், ஆரம்ப கால கல்வி, பருவ கால தடுப்பூசிகள், தாய், சேய் நலனுக்கு தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
இங்குள்ள 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் 150 கிராம் எடை கொண்ட ஊட்டச்சத்துமாவு உருண்டை விலையில்லாமல் வழங்கப்பட்ட்து.

அதேபோல் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் விலை இல்லாமல் தினந்தோறும் 220 கிராம் சத்துமாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வந்தது. இதனை மாற்றி தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை 2 கிலோ எடை கொண்ட சத்துமாவு பாக்கெட் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் சுமார் 40 லட்சம் பேர் நேரடியாக பயனடைந்து வருவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், அங்கன்வாடி பணியாளர்களின் பொறுப்பற்ற செயலால் இந்த திட்டம் விளலுக்கு இறைத்த நீராக வீணாகி வரும் அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அங்கன்வாடி மையங்களுக்கு கொண்டு வரப்படும் 25 கிலோ எடை கொண்ட சத்துமாவு பாக்கெட்டுக்களை அப்படியே வெளி சந்தைகளுக்கு கொண்டு சென்று சில அங்கன்வாடி பணியாளர்கள் விற்றுவருவதாக கூறப்படுகின்றது. அங்கன்வாடி பணியாளர்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாக இதனை வாங்கி பலர் மாட்டுத்தீவணமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் சர்வ சாதாரணமாக தமிழகம் முழுவதும் இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்கப்பட்டு வருவதால் குழந்தைகளுக்கு முறையாக சத்துமாவு வழங்கப்படுவதில்லை என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

கால்நடை தீவன பொருட்களின் விலையை காட்டிலும் மிக குறைந்த விலையில் சத்துமாவு பாக்கெட்கள் கிடைப்பதால், கோழி, பன்றி, பசு போன்ற கால்நடை வளர்ப்பவர்கள் இடைத்தரகர்கள் மூலம் மூட்டை மூட்டையாக அங்கன்வாடி சத்துமாவை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மக்கள் நலன் கருதி அரசு செயல்படுத்தி வரும் மகத்தான ஊட்டச்சத்து மாவு திட்டத்தை , மாட்டுத்தீவன திட்டமாக மாற்றிய அங்கனவாடி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இத்திட்டத்தின் பயன் உரியவர்களுக்கு மட்டும் கிடைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.!
மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment