அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! கனிஷ்க் நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

அமலாக்கத்துறை,வங்கிகளிடம் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை  முடக்கியிருக்கிறது.

தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கனிஷ்க் நிறுவனம், எஸ்பிஐ உள்பட 14 வங்கிகளிடம் 2009ல் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இருப்பில் இருந்ததை காட்டிலும், சுமார் 3000 கிலோ தங்கம் அதிகமாக இருப்பதாக போலியான நிதி அறிக்கை தயார் செய்து வங்கிகளில் கடன் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அந்த பணத்தில் கிருஷ் ஜுவல்லரி தொடங்கியதுடன், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கத்துறை கிராமத்தில் நகை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து மற்ற நிறுவனங்களும் நகைகளை விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான புகாரில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அதன் நிறுவனர் பூபேஷ்குமார், இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் பூபேஷ்குமார் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த நிலையில் புக்கத்துறையில் உள்ள கனிஷ்க் நிறுவனத்திற்கு சொந்தமான நகை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலம், கட்டிடம், எந்திரங்கள் உள்பட 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment