பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: குறித்து விசாரிக்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த விசாரணை குழு வாபஸ்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க துறைசார் விசாரணைக் குழு அமைக்கும் திட்டத்தை, திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்ற சில முறையற்ற நிகழ்வுகளில்  பல்கலைக்கழகத்தின் பெயரும் இழுக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள் அடங்கிய 5 நபர் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான சம்பவம் தொடர்பாக எந்த பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில், பல்கலைக்கழகம் உறுதியாக இருப்பதாகவும், எனவே, துறைசார்ந்த விசாரணைக்கு உத்தரவிடும் திட்டம் திரும்பப்பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அமைத்துள்ள விசாரணைக் குழுவுக்கு பல்கலைக்கழகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment