திருவள்ளூர் ஜெர்சி பால் நிறுவனத்தின் ரூ. 28 லட்சம் பணம் கொள்ளை!

28 லட்சம் ரூபாய் பணம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஒரக்காட்டில் ஜெர்சி பால் நிறுவனத்தின்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஜெர்சி பால் நிறுவனத்தின் பணத்தை சென்னையைச் சேர்ந்த சென்னை ரேடியேஷன் என்ற தனியார் நிறுவனம் வசூலித்து வங்கியில் செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.  இந்நிலையில் வசூலான 28 லட்சம் ரூபாய் பணத்தை ரேடியேஷன் நிறுவனத்தின் காசாளர் மற்றும் உதவியாளர், துப்பாக்கி ஏந்திய காவலர், மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் கிண்டியில் உள்ள வங்கிக்கு காரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஜெர்சி பால் நிறுவன அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட காசாளர் 4 இருசக்கர வாகனங்களில் வழிமறித்த 8 பேர் காரின் கண்ணாடியை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து போலீசார் வந்து பார்த்த போது காரில் இருந்த பணப்பெட்டி உடைக்கப்படாமல் சாவி பெட்டியிலேயே இருந்ததாகவும், ஆனால் பணத்தை மட்டும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் பணத்தை எடுத்துச் சென்றவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதையடுத்து போலீசாரின் சந்தேகம் வலுத்துள்ளது. வந்தவர்கள் தங்களை கடுமையாகத் தாக்கியதாக காரில் சென்றவர்கள் தெரிவித்த நிலையில் அவர்கள் உடலில் எந்தக் காயமும் இல்லை. மேலும் காவலரிடம் துப்பாக்கி இருந்த நிலையில் கொள்ளையர்களை தடுக்காமல் விட்டது எப்படி என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment