“தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” – கே.எஸ் அழகிரி எச்சரிக்கை..!

தமிழகத்திற்கு ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார்.இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிற கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழகத்திற்கு ஆர்.என்.ரவியை புதிய ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

புதிய ஆளுநர்:

“ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. பாட்னாவைச் சேர்ந்த இவர் 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பிறகு 2012 ஆம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டுப்புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு துணை
ஆலோசகராகவும் பணியாற்றினார்.

உள்நோக்கம் உள்ளது:

முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

நாடே பார்த்து நகைப்பு:

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். உதாரணமாக, முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரண் பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது.

சந்தேகம் உள்ளது:

ஏனெனில்,அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசைச் செயல்படவிடாமல் நித்தம் இடையூறு செய்து மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட அவரை, கடும் எதிர்ப்பு காரணமாக, மோடி அரசு திரும்பப் பெற்றது. அந்த வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பதும் சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் நேர்மையான ஆட்சி:

ஜனநாயகத்தின் தொட்டிலாக கருதப்படுகிற தமிழகத்தில், வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக, மோடி அரசு நியமித்திருக்கிறதோ? என்று நான்
சந்தேகப்படுகிறேன்.

பகடைக்காய்:

தமிழகத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க., ஆளுநர் நியமனத்தின் மூலம் அச்சுறுத்த நினைக்கிறது. ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசியல் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவும், தமிழகத்தில் பா.ஜ.க-வை வளர்த்தெடுக்கவும் முயல்கிறது. இதற்காக ஆர்.என்.ரவியை பகடைக்காயாகப் பயன்படுத்த மோடி அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டில், நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.

தடைக்கலாக ஆளுநர்:

புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண் பேடி செய்த இடையூறுகளால், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போனது. மாநில அரசின் வளர்ச்சிக்காக முன்னேநிற்க வேண்டிய ஆளுநரே, தடைக்கல்லாக இருந்ததைப் புதுச்சேரியில் பார்த்தோம்.அதேபோன்ற நிலை தமிழகத்திலும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டவர் ஆர்.என்.ரவி.

எச்சரிக்கை:

இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை, புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன்”,என்று தெரிவித்துள்ளார்.