பள்ளி குழந்தைகள் யாருக்கும் கண் பார்வை பாதிப்பு இல்லை – நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்.!

திருநெல்வேலி மாவட்டம் அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் யாருக்கும் கண் பார்வை பாதிப்பு இல்லை என்றும், அனைவரும் வெளிநோயாளியாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழாவில் அதிகத் திறனுள்ள மின்விளக்குகளைப் பயன்படுத்தியதால் மாணவர்களுக்கும் விழாவுக்கு வந்த பெற்றோருக்கும் கண்கள் சிவந்து காணப்பட்டதுடன், கண்ணில் நீர்வடிதல், கண்கூசுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து மாணவர்கள் பெற்றோர் என நூறு பேர் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். மருத்துவர்கள் குழந்தைகளின் கண்களைப் பரிசோதித்துச் சிகிச்சை அளித்தனர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளைப் பார்வையிட்டதுடன், மருத்துவமனைக் கண்காணிப்பாளரிடம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகத் திறனுள்ள மின்விளக்கொளி பட்டதால் மாணவர்களின் கண்களில் நீர் வடிதல், கண் சிவந்திருத்தல் ஆகிய அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.

எவருக்கும் பார்வை பாதிக்கப்படவில்லை என்றும் அனைவரும் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பி வட்டதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் 2 நாட்களில் கண்ணீர் வடிதல் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குறிப்பிட்டார்.

இதனிடையே ஏர்வாடி எஸ்.வி.இந்து தொடக்கப்பள்ளித் தாளாளர் பாலசுப்பிரமணியன், ஒலிஒளி அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் மீது கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான ஒலிஒளி அமைப்பாளர் ரமேசைத் தேடி வருகின்றனர்.

School children do not have any vision – Nellai district collector information!

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment