234 தொகுதிகளிலும் படப்பிடிப்பு? திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு….

திரைப்படமாக  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை  ‘முல்லை வனம்’ இயக்குநர் ரவி ரத்தினம்
இயக்குகிறார்.

மதுரையிலுள்ள தனியார் உணவு விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ரவி ரத்தினம், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்
திரைப்பட, அரசியல், சமூக வாழ்க்கை குறித்த வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருக்கிறேன். நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சி தற்போது
தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இந்தப் படத்திற்கான தலைப்பும் முடிவு செய்யப்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கையில் அவர் பெற்ற வெற்றி, அரசியலில் எம்ஜிஆரால் எவ்வாறு கொண்டு வரப்பட்டார்? பிறகு தன்னைச்சுற்றியிருந்த எதிரிகளுக்கு மத்தியில் துணிச்சலாக அரசியல் செய்த விதம்,
தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளை எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடாமல் பெற்றுக் கொடுத்தது என பல்வேறு விசயங்கள் இந்தப் படத்தில் இடம் பெறும் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் எவ்வாறு தமிழக அரசால் நினைவிடமாக அறிவிக்கப்பட்டுள்ளதோ, அதுபோன்று ஜெயலலிதாவும் ஏழு கோடி தமிழக மக்களுக்குச்
சொந்தமானவர். ஆகையால் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த முயற்சிக்கு எவரும் தடை கோர மாட்டார்கள் என நம்புகிறோம். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், மதுரைக்கும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில்தான் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை அறிவிக்கும் முடிவை அறிவிக்க மதுரையையே தேர்ந்தெடுத்தோம் என்று கூறினார். மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஓராண்டு நடைபெறும். ஜெயலலிதாவின் முகச்சாயல் ஒத்துப்போகக்கூடிய ஒரு நடிகையைத்தான் தற்போது தேர்வு செய்து வைத்துள்ளோம். படத்தின் ஒளிப்பதிவு தொடங்கும்போது அந்த நடிகையை அறிமுகம் செய்வேன்’ என்றார்.

ரஜினி நடித்த லிங்கா படத்தின் கதை குறித்து ரவிரத்தினம் தொடர்ந்து வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment