ரூ.4 கோடி மதிப்பிலான காரை வாங்கிய பாலிவுட் பிரபலம் ஹிருத்திக் ரோஷன்..!!!

ஹிந்தி நடிகர் ரன்பீர் சிங்கை தொடர்ந்து அடுத்து ஒரு பாலிவுட் பிரபலம் அஸ்டன் மார்ட்டின் காரை வாங்கி இருக்கிறார். அண்மையில் நடந்த ஐபிஎல் துவக்க விழாவில் ஆட்டம் போட்ட கையோடு, புதிய அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரை டெலிவிரி பெற்றிருக்கிறார் பாலிவுட் நடனப் புயல் ஹிருத்திக் ரோஷன்.

ரூ.3.90 கோடி எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட இந்த காரை டெலிவிரி பெற்றதோடு, தனது குடும்பத்தினருடன் அதில் பயணித்து மகிழ்ந்திருக்கிறார் ஹிருத்திக். பொதுவாக பாலிவுட் பிரபலங்கள் கருப்பு அல்லது அடர் வண்ணங்களை தேர்வு செய்வது வழக்கம். ஆனால், அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரின் சில்வர் வண்ணத்தை தேர்வு செய்து வாங்கி இருக்கிறார் ஹிருத்திக்.

இந்த காரின் இன்டீரியர் அடர் வண்ணத்தில் இருக்கிறது. அஸ்டன் மார்ட்டின் கார்களில் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மாடலாக இது கருதப்படுகிறுது. 4 கதவுகள் கொண்ட இந்த கார் சிறப்பான இடவசதியை அளிக்கிறது. குறிப்பாக, இந்தியர்கள் மத்தியில் இந்த மாடல் அதிக வரவேற்பை பெற்றிருப்பதற்கு நடைமுறை பயன்பாட்டிற்கு சிறந்த மாடலாக இருப்பதே காரணமாக பார்க்கப்படுகிறது.

அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் காரில் சக்திவாய்ந்த 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 552 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இசட்எஃப் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரேபிட் குடும்ப வரிசையில் தற்போதைய தலைமுறை மாடல்தான் மிக மிக சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்.

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 327 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை வாய்ந்த ஸ்போர்ட்ஸ் செடான் ரக கார். இந்த காருக்கு பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீகளையும், இன்டீரியர் கஸ்டமைஸ் வசதிகளை அஸ்டன் மார்ட்டின் வழங்குகிறது. குறிப்பாக, இந்த காருக்கு வழங்கப்படும் 1000 வாட் திறன் கொண்ட பேங் அண்ட் ஒலுஃப்சன் ஆடியோ சிஸ்டம் வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கி பொருத்தப்படுகிறது.

இந்த விலை உயர்ந்த காரில் டியூவல் காஸ்ட் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டார்க் கன்ட்ரோல், இபிடி தொழில்நுட்பம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் ஏராளம். அஸ்டன் மார்ட்டின் ரேபிட் எஸ் கார் வாங்கி இருக்கும் ஹிருத்திக் ரோஷனிடம் ஏற்கனவே ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட், போர்ஷே கேயென் டர்போ எஸ், ரேஞ்ச்ரோவர் வோக், மேபக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் – க்ளாஸ் உள்ளிட்ட உலகின் மிகச் சிறந்த உயர்வகை சொகுசு கார்கள் கராஜில் வரிசையாக நிற்கின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment