#BREAKING: மீண்டும் தர்மயுத்தம்.. ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் ஓபிஎஸ்?

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டம்.

சென்னை மெரினாவில் கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஜெயலலிதா நினைவிடம் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.  ஓபிஎஸ்ஸுக்கு 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டது. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை எழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அதிமுக மாவட்ட செயலாளர் அசோக், முன்னாள் அமைச்சர் மைத்ரேயன் உள்ளிட்ட பலரும் இன்று ஈபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வலுப்பெற்று வருகிறது.

மேலும், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெரினாவில் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அவரது நினைவிடம் சென்று ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தார். தற்போது அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்கவுள்ளார்.

இதனிடையே, ஜெயலலிதா நினைவிடத்தில் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ஓபிஎஸ் வாழ்க என முழக்கமிட்டு வருகின்றனர். ஒற்றை தலைமை கோரிக்கையை கைவிடும் வரம் போராடுவோம் என்றும் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவி யாருக்கும் வழங்கக்கூடாது எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் எடப்பாடியே துரோகத்தை நிறுத்து எனவும் முழக்கமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் ஜெயலலிதா நினைவிடம் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பி வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment