#Breaking:சற்று முன்…பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லலாமா? – ஓபிஎஸ் அவசர கடிதம்!

அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நாளை வானகரம்,ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறவுள்ளது. இதனிடையே,அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்சனை தொடரும் நிலையில்,ஓபிஎஸ்,ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.எனினும்,ஈபிஎஸ்ஸை சந்தித்து கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகளும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி வலுப்பெற்று வருகிறது.அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் ஈபிஎஸ்க்கான ஆதரவு அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக,எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய விதிமுறைகளை பின்பற்றி நாளை ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும்,ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும், கூறப்படுகிறது.

இந்நிலையில்,நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூறிய நிலையில்,பொதுக்குழுவுக்கு செல்ல வேண்டாம் என்று தற்போது அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம்,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதனிடையே,பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்றும்,அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் விண்ணப்பித்த ஓபிஎஸ் கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது.பொது இடத்தில் நடைபெற்றால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி தரவோ,மறுக்கவோ முடியும் என்றும்,மாறாக உள் அரங்கத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment