ஜிஎஸ்டி ரூ.20 லட்சம் வரை செலுத்த தேவையில்லை என்பதால் உணவு பொருள் விற்போரின் உரிம கட்டணம் மாறுகிறது!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)  ரூ.20 லட்சம் வரை செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விற்போரின் பதிவு சான்று அல்லது உரிமக் கட்டணத்தில் மாற்றம் வருகிறது.

உணவுப் பொருட்கள் விற்கும் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வணிகர்கள் வரை பதிவுச் சான்று அல்லது உரிமம் வைத்திருப்பதை உணவுப் பாதுகாப்புத் துறை உறுதி செய்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் அதற்கு ரூ.100 செலுத்தி பதிவுச் சான்று பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்கு மேல் வணிகம் செய்தால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் இருந்த குளறுபடிகள், நடைமுறைச் சிக்கல்களைக் களையும் வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் பதிவுச் சான்று, அல்லது உரிமத்தை ஆன்-லைனில் விண்ணப்பித்து பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வியாபாரிகள் fssai (Food Safety And Standards Authority of India) இணையதளத்தில் நுழைந்து, அதில் Registration-ஐ கிளிக் செய்தால், அனைத்து மாநிலங்களின் பட்டியல் வரும். அதில் தமிழ்நாட்டை கிளிக் செய்து உள்ளே நுழைந்து பதிவுச் சான்று அல்லது உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்ததும், அதிலுள்ள தகவல்களை சரிபார்க்கும்படி உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிடுவார். சம்பந்தப்பட்ட இடத்துக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரி சென்று ஆய்வு செய்து, மாவட்ட நியமன அலுவலருக்கு அறிக்கை அளிப்பார்.

அதையடுத்து குறிப்பிட்ட வியாபாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுச் சான்று அல்லது உரிமம் அனுப்பி வைக்கப்படும். வியாபாரி தனது மின்னஞ்சலில் வந்த உரிமத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி கடையில் வைத்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பெ.அமுதா கூறும்போது, “தமிழ்நாட்டில் இதுவரை சிறிய வியாபாரிகளுக்கு 3 லட்சத்து 89 ஆயிரத்து 087 பதிவுச் சான்றுகளும், பெரிய வியாபாரிகளுக்கு 75 ஆயிரத்து 208 உரிமங்களும் வழங்கியுள்ளோம். இதுதவிர 10 லட்சம் பதிவு சான்று மற்றும் உரிமங்களை வழங்க வேண்டியுள்ளது. இதனிடையே, ரூ.20 லட்சம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தொகை வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனால், அதுகுறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசும் பரிசீலித்து வருகிறது. மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய பிறகு பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறுவதற்கான கட்டண விகிதம் உள்ளிட்டவற்றில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment