சட்டப்பேரவையில் மருத்துவமனைகளின் பதிவை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றம்!

சட்டப்பேரவையில்  தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா நிறைவேறியது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி மருத்துவமனைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். சிறு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வரை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, அடிப்படை வசதிகள், கருவிகள், படுக்கைகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட வசதிகள் இருக்க வேண்டும். ஏற்கெனவே இயங்கி வரும் மருத்துவமனைகள் பதிவு செய்யப்படவில்லை எனில் அதற்கு 9 மாதங்களும், புதிதாக துவக்கப்படும் மருத்துவமனைகள் பதிவு செய்ய 6 மாதங்களும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

சாலைவிபத்துகள், தீக்காயங்கள், தற்கொலை முயற்சி தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும்போது முதலுதவி சிகிச்சை மறுக்காமல் அளிக்க வேண்டும் என்ற பிரிவும் மசோதாவில் இடம்பெற்றிருந்தது. விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகளுக்கும், தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது. 3 முறைக்கு மேல் விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனையின் பதிவு ரத்து செய்யப்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பதிவுபெற்ற மருத்துவமனைகளின் பட்டியல் அரசிதழில் வெளியிடப்படும் என்றும், அந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment