கைது செய்யப்பட்ட 65 பேருக்கு தூத்துக்குடியில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய  மறுத்து விட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடந்த போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சொந்த ஜாமீனில் விடுதலை செய்திருந்தார்.  அரசு தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் 65 பேருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டதால் அதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி  தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யபட்ட 65 பேரிடமும்,  விசாரணையின் போது நீதித்துறை நடுவர் பெற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment